தேடல் – by Ahila Ruban

Part 1 - அக்ஷனாவின் பக்கக் கதை

யணத்திற்குத் தேவையான பொருட்களைப் பெட்டிக்குள் எடுத்து வைக்க ஆரம்பித்தேன். உள்ளே வைக்குமுன் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தைத் திறந்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினேன். அக்ஷராவின் நினைவுகள் சித்திரங்களாகக் காட்சியளித்தன. அக்ஷராவும் நானும் இரட்டைக் குழந்தைகள். சிறுவயதிலிருந்தே அவள் உணர்ச்சிகளை நான் இலகுவாகப் புரிந்துகொள்வேன். அவள் வேதனைப் படுகிறாள் என்றால் எங்கிருந்தாலும் நான் உணர்ந்துகொள்வேன். அவளைத் தேடிச் சென்று அணைத்துக்கொள்வேன்.

 

வாசல் மணி அடிக்கும் ஓசை கேட்டுக் கதவைத் திறந்தபோது மது, “வணக்கம் அக்ஷனா,” என்றான்.
“என்ன வேண்டும்?” என்றேன் குழப்பத்துடன். மதுவுக்குக் கீழ் நான் வேலை பார்க்க ஆரம்பித்துப் பல மாதங்கள் ஆகின்றன. நான் வேலையில் சேர்ந்த நாளில் இருந்து அவன் என்மேல் தனி அக்கறை காட்டுவான். என் வாழ்க்கையைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் அடிக்கடி வினவுவான். நான் மறக்க முயலும் என் இளமைக் காலத்தைப் பற்றி அவன் கேள்விகேட்கும்போது கையில் இருக்கும் பொருளை அவன் மேல் விட்டெறியத்தோன்றும். எனக்கு அக்ஷரா என்று ஒரு சகோதரி இருந்த விஷயத்தை நான் யாருக்கும் சொன்னதில்லை. மதுவும் அதற்கு விதிவிலக்கில்லை.
“நீங்கள் ஊருக்குப் போறப்போ என் வருங்கால மனைவியிடம் இந்தப் பார்சலைக் கொடுத்துவிட முடியுமா?” என்றான். வருங்கால மனைவியா? அவளிருக்கத்தான் என் பின்னால் சுற்றினானா?

 

மனதில் தோன்றிய ஆச்சரியத்தை மறைத்து, “முடிந்தால் செய்கிறேன்,” என்றேன். “பாக்கிங் வேலை இருக்கிறது,” என்றுவிட்டுக் கதவை மூடிக்கொண்டு உள்ளே வந்தேன். இதுவரை மதுவுக்கு என்மேல் பிடிப்பிருப்பதாக நான் நினைத்தது தப்பா? அவன் கொடுத்த பொருளை பெட்டிக்குள் வைத்து மூடினேன். நோட்டுப்புத்தகம் வெளியில் இருப்பதைக் கண்டு அதைக் கைப்பைக்குள் வைத்து எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

 

விமானத்தில் ஏறி பெட்டியை மேலே வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். விமானம் மேலே ஏற ஆரம்பித்ததும் கைப்பையில் இருந்த நோட்டுப் புத்தகத்தைக் கையில் எடுத்து ஒவ்வொரு சித்திரமாக ஆராய ஆரம்பித்தேன். எனக்கு அக்ஷராவுடன் இருக்கும் உளத்தொடர்பு பிறக்கும்போதே ஏற்பட்டுவிட்டதாக அப்பா சொல்வார். நாங்கள் பிறக்கும்போது அவள் முதலில் வெளிவந்துவிட நான் உள்ளுக்குள் சிக்கிக்கொண்டேன். டாக்டர்களால் என்னை வெளியே எடுக்கமுடியவில்லை. என் இதயத்தின் வேகம் குறைந்து ஆபத்தான நிலைக்குப் போனபோது நான் இறந்துவிடுவேனோ என்று அவர்கள் பயந்தார்களாம். அப்போது அக்ஷரா கத்தி அழ ஆரம்பிக்கவும் என் இதயம் மறுபடியும் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. சத்திர சிகிச்சை மூலம் என்னை வெளியே எடுத்தார்கள்.

 

எங்கும் நெருப்பும் புகையுமாக இருந்தது. அழும் என்னை இரண்டு கைகள் தூக்கின. எரியும் புகைவண்டியிலிருந்து காப்பாற்றியவர் என்னை அப்பா கையில் கொடுத்தார். நான் அப்பாவின் கழுத்தைக் கட்டியபடி அழுதுகொண்டிருந்தேன். “பயப்படாதே, அக்ஷனா. இனிமேல் உனக்கு ஆபத்தில்லை,” என்று அப்பா என்னைத் தடவிக்கொடுத்தார்.
“என் குழந்தை இன்னும் உள்ளே இருக்கிறாள். அவளைக் காப்பாற்றுங்கள்,” என்று கதறியபடி தீக்குள் பாய முயலும் அம்மாவை ஒருவர் பிடித்திருந்தார். “அக்ஷரா!” என்று அம்மா பல தடவைகள் கத்தியபோதும் அவள் பதிலளிக்கவில்லை. திடீரென்று என்னை யாரோ எரியும் நெருப்பிலிருந்து தூர எடுத்துச் சென்றார்கள். சிறிது சிறிதாக அந்தக் காட்சி கண்களைவிட்டு மறைய என்மேல் சோகம் படிந்தது. விமானத்தின் குலுக்கலுடன் கண்விழித்தேன். கையில் நோட்டுப்புத்தகத்துடன் தூங்கிவிட்டேன். இந்தக் கனவின் கடைசிக் காட்சி எனக்குச் சொந்தமில்லை. அதற்கு சொந்தக்காரி அக்ஷராவாக இருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன்.

 

விமானம் தரையிறங்கியதும் பயணிகளுடன் வெளியேறிக் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு என் இலக்கை நோக்கிச் சென்றேன். அந்த விபத்து நடந்தபோது எங்களுக்கு ஒன்பது வயது. அக்ஷரா புகைவண்டி விபத்தில் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். பலர் தீயில் எரிந்துவிட்டதால் அவளை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்கள்.

 

அதன்பின் என் கனவுகள் ஆரம்பித்தன. அவள் காண்பவற்றை நான் காண்பதுபோல் என் கனவுகள் தோன்றும். அவள் எங்கோ ஒரு வீட்டில் வேலைக்காரியாக நடத்தப்படுவதைக் கண்டு வேதனையுடன் கண்விழித்து அழுவேன். அவள் உயிருடன் இருக்கிறாள் என்று சொன்னபோது யாரும் நம்பவில்லை. அவளை இழந்ததால் ஏற்பட்ட மனப்பாதிப்பு என்று நினைத்தார்கள். இடமாற்றம் எனக்கு நல்லதென்று நாடுவிட்டு நாடு வந்தார்கள் என் பெற்றோர். என் கனவுகளும் அதன் வேதனைகளும் என்னுடன் தொடர்ந்தன. நான் அதைப்பற்றி வெளியே பேசுவதை நிறுத்திவிட்டேன்.

 

கனவில் நான் காணும் காட்சிகளை வரைபடமாக மாற்றினேன். இன்டர்நெட்டில் அவற்றைப் போட்டு யாருக்காவது அந்தக் காட்சிகள் எங்கே இருக்கின்றன என்று தெரியுமா என்று கேட்பேன். அதுபோலப் பல இடங்கள் இருப்பதாகக் கூறினார்கள். சிறுவயதில் அக்ஷரா என் கனவில் வந்து அழுவாள். தன்னை அழைத்துப் போகும்படி கெஞ்சுவாள். காலப்போக்கில் அவள் என்னை அழைப்பது நின்றுவிட்டது. அன்று ஒருநாள் அவள் புகையிரத நிலையம் ஒன்றில் நிற்பதைக் கனவில் கண்டேன். அந்த நிலையத்தின் பெயரையும் தெளிவாகப் பார்த்தேன். எங்கிருக்கிறது என்று இன்டர்நெட்டில் கேட்டபோது பலர் வழிகாட்டினார்கள்.

 

புகையிரத நிலையத்தை அடைந்ததும் வண்டியை விட்டு இறங்கிக் காத்திருந்தேன். போவோர் வருவோரை ஆராய ஆரம்பித்தேன். அவளை என்னால் அடையாளம் காண முடியுமா? அவளில்லாத பதினாறு வருடங்களில் ஒருமுறைதான் இதைப் பார்த்திருக்கிறேன். அவள் மறுபடியும் இங்கு வருவாளா? கேள்விகள் குடைந்தன.

 

மாலை சாயும்வரை காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடனும் சோர்வுடனும் முன்பே தங்க ஏற்பாடு செய்திருந்த விடுதிக்கு வந்தேன். உடைமாற்றிக்கொண்டு படுக்கலாம் என்று பெட்டியைத் திறந்தபோது மது கொடுத்த பார்சல் கண்ணில் பட்டது. அவன் வருங்கால மனைவி வாழும் இடம் அதிக தூரம் இல்லாததால் அதையாவது வெற்றிகரமாகச் செய்வதென்று முடிவுடன் தூங்கிப்போனேன்.

 

அதிகாலை எழுந்து மதுவின் வருங்கால மனைவியை சந்திக்கப் புறப்பட்டேன். அவள் வீட்டை நெருங்க நெருங்க எல்லாமே பழகிய இடங்கள் போல் தோன்றின. நான் கனவில் கண்ட இடங்களாக இருக்குமோ என்ற எண்ணம் உற்சாகத்தை வரவழைத்தது. அவள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திக் கதவின் மணியை அடித்துவிட்டுக் காத்திருந்தேன். சுற்றிவரத் தெரியும் காட்சிகள் முன்பே கண்டவைபோல் தோன்றவும் குழப்பமும் ஆச்சரியமும் கலந்துகொண்டன.

 

கதவு திறக்க அதன் பின்னால் நெற்றியின் வியர்வையைத் துடைத்தபடி அப்படியே என் சாடையில் அவள் நின்றாள். அவள் கையிலும் நெற்றியிலும் தழும்புகள் என் கனவில் வந்த காயங்களை நினைவு படுத்தின. மிகவும் மெலிந்த உடலும், கலைந்துபோன முடியுமாக அவள் நின்றிருந்தாள். வாழ்க்கையில் பிடிப்பை இழந்துவிட்ட அவள் விழிகளும் என்னை ஆராய்ந்தன. “என்ன வேண்டும்?” என்றாள் அவள் கடுமைகாட்டி.

 

“மது இதைக் கொடுக்கும்படி தந்துவிட்டான்,” என்று அவளிடம் அவன் கொடுத்த பொருளை நீட்டினேன். அதை வாங்கியவள் என்னை மீண்டும் உற்றுப் பார்த்தாள்.
“யாரது?” என்று உள்ளிருந்து ஒரு பெண் குரல் கேட்டது.
“நீ போய்விடு,” என்றவள் என்னை வெளியே விட்டுக் கதவை மூடினாள். நான் செய்வதறியாது திகைத்தேன்.
“மது என்னவோ அனுப்பியிருக்கிறான்,” என்று அவள் கூறுவது கேட்டது.

 

“எனக்காகத்தான் இருக்கும்,” என்று இன்னுமொரு இளம் பெண்ணின் குரலும் கேட்டது. அதிர்ச்சியுடன் வண்டிக்குள் ஏறி என் விடுதியை நோக்கி ஓட்டினேன். இது சாத்தியமா என்று மனம் பலதடவை கேள்வி கேட்டது. இதுவரை நான் கண்ட கனவுகளுக்கு இப்படி ஒரு விளக்கம் கொடுத்தபோதும் அதை நான் முழுவதாக நம்பவில்லை. அவள் என்னை அடையாளம் கண்டுகொண்டாளா? ஏன் கதவை மூடினாள்? பல கேள்விகள் மனதைத் துளைக்க என் அறையை அடைந்து கதவை மூடிவிட்டு இனிமேல் என்ன செய்வது என்று புரியாத குழப்பத்துடன் தரையில் அமர்ந்தேன். ஃபோனில் மதுவின் செய்தி, ‘என் வருங்கால மனைவியை சந்தித்தீர்களா?’ என்றது.

Part 2 - அக்ஷராவின் பக்கக் கதை

 வாசல் மணியோசை கேட்டுக் கதவைத் திறந்தபோது புதிதாகப் பூத்த மலர்போல் அழகாக நிற்கும் அவள் மெருகூட்டிய என் பிம்பம் போல் தோன்றினாள். எப்படி இது சாத்தியம்? அக்ஷனா இறந்துவிட்டாள் என்று எப்போதோ நான் முடிவெடுத்தபின் அவள் எங்கிருந்து இப்போது என்முன் தோன்றினாள்? அவள் உயிருடன் இருந்தாள் என்றால் என் அழுகைக் குரல் கேட்டு ஏன் தேடி வரவில்லை? இதுவரை என்னைச் சமாதானப் படுத்த நான் உபயோகித்த காரணங்கள் பொய்யானபோது ஒருபுறம் அவளை அந்த விபத்தில் இழக்கவில்லை என்ற மகிழ்ச்சியும், மறுபுறம் என்னை அனாதையாக வளர விட்டாளே என்ற கோபமும் தோன்றியது. கோபம் முந்திக்கொள்ள, “என்ன வேண்டும்?” என்றேன். 

 

“மது இதைக் கொடுக்கும்படி தந்துவிட்டான்,” என்று ஒரு பார்சலை என்னிடம் நீட்டினாள். மேலும் குழப்பம் அதிகமாக அதை அவளிடம் இருந்து வாங்கினேன். 
உள்ளிருந்து, “யாரது?” என்ற அம்மாவின் குரல் கேட்டபோது எங்கே அக்ஷனாவிற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் தோன்ற கதவை மூடி அவளை அவர்களிடம் இருந்து மறைத்தேன். மது அனுப்பியிருக்கிறான் என்றதும் வந்தனா ஓடிவந்து கையிலிருந்த பொருளைப் பறிந்துக்கொண்டு போய்விட நான் அமைதியாகப் பாத்திரங்கள் கழுவச் சென்றேன். ஒவ்வொன்றாகப் பாத்திரங்களைத் தண்ணீரில் கழுவும்போது என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

 

அக்ஷனா என் இரட்டைச் சகோதரி. சிறு வயதிலிருந்து என் மனக்கிளர்ச்சிகளை அவளும் உணர்ந்துகொள்வாள். நான் எங்கிருந்தாலும் என் வேதனையைப் புரிந்துகொள்வாள். அவள் என்னைத் தன் குழந்தைபோல் பார்த்துக்கொள்வாள். எங்களுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது ஏற்பட்ட ரயில் விபத்து எங்கள் உறவுக்கு முற்றுப் புள்ளி வைத்தது. 
நானும், அக்ஷனாவும் எங்கள் பெற்றோருடன் பயணம் செய்தோம். அவர்கள் உறங்கிவிடவும் நான் ஜன்னலோரத்தின் இருக்கையில் எழுந்துநின்று ஓடும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் விழித்திருந்திருந்தால் இந்தச் செய்கையை அனுமதித்திருக்க மாட்டார்கள். அப்பொழுதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. 
இன்றுவரை எனக்கு அந்த நிகழ்ச்சி தெளிவாகப் புரியவில்லை. ஏதோ ஒரு பலத்த சத்தமும் அதைத் தொடர்ந்து நான் வானத்தில் பறப்பதுபோல் ஓர் உணர்வும்தான் ஞாபகம் இருக்கிறது. புதரொன்றில் உருண்டோடிய நான் பலத்த காயங்களுடன் ஒரு மரத்தில் மோதி நின்றேன். அசையமுடியாத வலியுடன் நான் அழுவதைக் கேட்டு என் பெற்றோரோ, அக்ஷனாவோ ஓடி வரவில்லை. தூரத்தில் தெரிந்த நெருப்பும் புகையும் என் குடும்பத்திற்கு சமாதி கட்டுவதாக நினைத்து நான் மேலும் அழுதேன்.

 

“இன்னுமா பாத்திரம் கழுவி முடிக்கவில்லை நீ?” என்ற அம்மாவின் குரல் கேட்டுக் கண்ணீரை அவசரமாகத் துடைத்துக்கொண்டு எழுந்தேன். கழுவியவற்றை அடுக்கி வைத்தபின் முன் வாசலுக்கு வந்து கதவைத்திறந்து அக்ஷனா இன்னும் இருக்கிறாளா என்று எட்டிப்பார்த்தபோது அவள் அங்கில்லை. என்னை மறுபடியும் பிரிந்து சென்றுவிட்டாளே என்ற எண்ணத்தில் இதயம் கனத்தது. போன தடவை அவளைப் பிரிந்த நாள் மனதில் இன்னும் பசுமையாக இருந்தது. 
தரையில் படுத்தபடி முனகிக்கொண்டிருக்கும்போது ஒருவர் என்னைத் தூக்கித் தன் வண்டியில் போட்டுக்கொண்டு செல்ல எரியும் நெருப்பு சிறிது சிறிதாக என் பார்வையிலிருந்து மறைந்தது. என்னைக் காப்பாற்றியவர்கள் என் உறவுக்காரர்கள் என்றார்கள். என் குடும்பம் விபத்தில் இறந்துவிட்டது என்று என் சந்தேகத்தை உறுதிப்படுத்தினார்கள். தங்களை அம்மா அப்பா என்று அழைக்கும்படி வற்புறுத்தியபோதும் அவர்கள் தங்கள் குழந்தைபோல் என்னை நடத்தவில்லை. நான் அவர்கள் வீட்டு வேலைக்காரியானேன். வேலையை சரியாக செய்யாவிட்டால் அடிவாங்கும் போதும் கடுமையான வேலைகளை செய்யும்போதும் இரவில் தனிமையில் தவிக்கும்போதும் இறந்துபோன அக்ஷனாவிடம் என்னை அழைத்துப்போ என்று மனதால் கெஞ்சுவேன். இறந்தபின்னும் அவள் என்னைப் புரிந்துகொள்வாள் என்று நம்பினேன். காலப்போக்கில் அந்த நம்பிக்கையும் விட்டுப் போனது. 

 

அம்மா கற்பமாக இருந்ததால் அதிகாலையில் எழுவதில் இருந்து இரவு தூங்கப்போகும்வரை வீட்டு வேலைகள் எல்லாம் என் தலையில் விழுந்தது. அவர்கள் மகன் மது மட்டும் இல்லையென்றால் நான் பைத்தியமாக ஆகியிருப்பேன். மதுவிற்கு என்னை விட ஐந்து வயது அதிகம். அவன் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டு வேலைகளில் எனக்கு உதவுவான். பாடம் சொல்லிக் கொடுப்பான். என்னைப் பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்தார்கள். பள்ளியில் இருக்கும் சில மணி நேரங்கள் என் சரணாலயமானது.

 

அம்மாவிற்குப் பெண் குழந்தை பிறந்தபோது அவளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன். வந்தனா மேல் நான் பாசம் வைத்திருந்தேன். அவளை என் குழந்தைபோல் பாதுகாத்தேன். ஆனால் வளர்ந்தபின் அவள் பெற்றோருடன் சேர்ந்துகொண்டு என்னைத் துரும்புபோல் நடத்தினாள். எனக்குப் பள்ளி இறுதியாண்டு முடிந்ததும் அந்தச் சிறு இடைவேளையும் கிடைக்காமல் போனது. நான் நல்ல மார்க்குகள் வாங்கியிருந்தும் மேற்படிப்புக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மதுவும் காலேஜ் முடித்து மேற்படிப்பிற்காக நாடு விட்டு நாடு சென்றான். என் மனதிற்கு இதம் கொடுத்த பள்ளியும் மதுவும் இல்லையென்றானபோதும் விரைவில் என்னை அழைத்துச் செல்வதாக மது கொடுத்த வாக்கை உயிர் நாடியாக இறுகப் பற்றியபடி காத்திருந்தேன். 

 

அக்ஷனா திரும்ப வரப்போவதில்லை என்ற முடிவுடன் கதவை மூடிக்கொண்டு வீட்டில் ஓர் மறைவிடம் பார்த்து அமர்ந்து நடந்தவற்றை வேதனையுடன் அசைபோட ஆரம்பித்தேன். அவளுக்கு விளக்கம் கொடுக்க ஒரு வாய்ப்புக் கூட நான் தரவில்லை. என்னை இதுவரை அவள் தேடி வராததற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருந்திருக்கும். எங்கள் பெற்றோருக்கு என்ன நடந்தது என்றுகூட நான் வினவவில்லை. என் முட்டாள் தனத்தை நினைத்தபோது மறுபடியும் அழுகை வந்தது. என் வாழ்க்கையை நாசமாக்கியவர்கள் அவளையும் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் கதவடைத்தேன். இப்போது அவளை நிரந்தரமாக இழந்துவிட்டேன். 

 

ஒரு விஷயம் நினைவுக்கு வர நிமிர்ந்து உட்கார்ந்தேன். மதுதான் அவளை என்னிடம் அனுப்பினான். அவனுக்கு அவள் யாரென்று தெரிந்துவிட்டதா? அவள் எங்கிருக்கிறாள் என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். நம்பிக்கை மனதில் மறுபடியும் பூத்தது.

 

 

Part 3 - மதுவின் பக்கக் கதை

 அக்ஷனா சென்றபின் காத்திருக்கப் பொறுமையின்றி அவளைத் தொடர்ந்தேன். அவள் வேலையில் சேர்ந்த அன்று தொடங்கியது என் ஆர்வம். அக்ஷராவின் நினைப்பிலேயே இருந்த எனக்கு அவள் முகத்தை அக்ஷனாவில் கண்டபோது என் ஏக்கத்தினால் வந்த மருட்சியாக இருக்குமோ என்று எண்ணினேன். நாளாக ஆக அக்ஷனாவின் ஒவ்வொரு செய்கையும் அக்ஷராவை நினைவூட்ட ஆரம்பித்தது.

 

அக்ஷராவை என் பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தபோது அவள் வாடிய பூப்போல் இருந்தாள். பார்த்தபோதே அவளைப் பாதுகாக்க மனம் துடித்தது. எனக்கு ஏதோ தூரத்து சொந்தம் என்று என் பெற்றோர் சொன்னபோதும் அவர்கள் அவளை நடத்தும் விதத்தில் இருந்து அவர்கள் வார்த்தைகளில் நம்பிக்கை ஏற்படவில்லை.

 

என்னை விட ஐந்து வயது சிறியவள் வீட்டில் நாய்போல் நடத்தப் படுவதைக் கண்டு வேதனையில் துடிப்பேன். அவளுக்கு முடிந்தவரை வீட்டு வேலைகளில் உதவுவேன். அவளைப் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்று பிடிவாதம் செய்தேன். என் பெற்றோர் மறுத்தபோது நானும் படிக்கமாட்டேன் என்று அடம் செய்தேன். என் படிப்பைப் பாதிக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தால் அவளையும் பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்தார்கள். அப்போதும் அவள் வீட்டுவேலைகளை செய்து முடிக்கவேண்டும் இல்லையென்றால் நிறுத்திவிடுவோம் என்று பயமுறுத்தினார்கள்.

 

அவர்களுக்குத் தெரியாமல் அவள் வேலைகள் சிலதை நானே செய்துவிடுவேன். இருந்தும் இரவில் களைத்துவிடும் அவள் வீட்டுப்பாடங்களை செய்யாமல் தூங்கப் போய்விடுவாள். வீட்டில் மற்றவர்கள் உறங்கியபின் அவளை இருத்தி வைத்து வீட்டுப்பாடங்கள் செய்யவைப்பேன். அவளுக்குப் புரியாதவற்றை சொல்லிக்கொடுப்பேன்.

 

அப்படி நாங்கள் படிக்கும்போதுதான் அக்ஷரா தன் இரட்டைச் சகோதரியைப் பற்றிக் கூறினாள். அவள் ரெயில் விபத்தில் அவர்கள் பெற்றோருடன் இறந்துவிட்டதாகவும் சொன்னாள்.
நான் மேல் படிப்புக்கு வேறு நாடு வந்தபோது அவளை விரைவில் அழைத்துச் செல்வதாக அக்ஷராவிற்கு வாக்குக் கொடுத்தேன். அதை நிறைவேற்றும் நாள் வந்தபோதுதான் அக்ஷனாவைக் கண்டேன். அக்ஷராவின் சகோதரி உயிருடன் இருக்கமுடியுமா? என் பெற்றொரின் நடத்தையில் ஏதோ ஒரு தப்பு இருக்கிறது. அவர்கள் அக்ஷராவைக் கடத்திக் கொண்டு வந்தார்களா என்று கேள்விகள் எழுந்தன.

 

அக்ஷனாவுடன் நெருங்கிப் பழக முயன்றேன். அவள் தள்ளித் தள்ளிப் போனாள். அவள் குடும்பத்தைப் பற்றிக் கேட்டால் அதிகம் சொல்லமாட்டாள். அவளுக்கு சகோதரி இருக்கிறாளா என்றால் இல்லை என்பாள். ஒருமுறை அவளிடம் ஒரு பத்திரம் கொடுக்கவென்று சாக்குச் செல்லி அவள் வீட்டுக்குப் போனேன். அப்போதுதான் அதைக் கண்டேன். ஒரு புகைப்படத்தில் இரண்டு சிறுமிகள் அவள் சாயலில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்தார்கள். அது யார் என்று நான் கேட்கவும் அக்ஷனாவின் கண்களில் வேதனை எட்டிப் பார்த்தது. யாரென்று சொல்லாமலே கதையை மாற்றிவிட்டாள்.

 

அக்ஷனா ஊருக்குப் போகிறேன் என்றபோது அவள் அக்ஷராவை சந்திக்க வைப்பதற்குத் திட்டம் போட்டேன். ஒரு பொருளைக் கொடுத்து வீட்டில் கொடுக்கச் சொன்னேன். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தால் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை.
விமானம் தரையிறங்கியது. அவளை சந்தித்தீர்களா என்ற என் கேள்விக்கு ஆம் என்று அக்ஷனா பதிலனுப்பினாள். அவள் இருக்கும் விடுதியை அடைந்தபோது அக்ஷனா அழுது சிவந்த கண்களுடன் என்னை வரவேற்றாள். நடந்த விஷயங்களை நாங்கள் அசைபோட்டபோதுதான் எங்கே தப்பு நடந்தது என்று புரிந்தது. அக்ஷராவும் அக்ஷனாவும் அவர்கள் பெற்றோரும் சென்ற ரயில் விபத்திற்குண்டான போது ஜன்னலோரம் எழுந்து நின்று விளையாடிக்கொண்டிருந்த அக்ஷரா தூக்கி எறியப்பட்டு புதருக்குள் உருண்டு விழுந்துவிட தூங்கிக்கொண்டிருந்த அக்ஷனாவையும் அவள் பெற்றோரையும் எரியும் ரயிலில் இருந்து யாரோ காப்பாற்றினார்கள். அவர்களால் அக்ஷராவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் தீயில் எரிந்துவிட்டதாக அவர்கள் முடிவுக்கு வர அதே நேரம் புதருக்குள் இருந்த அக்ஷராவை என் பெற்றோர் கண்டு தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள். எரியும் நெருப்பில் அவள் பெற்றோர் இறந்துவிட்டதாக அவர்கள் சொன்னபோது அக்ஷராவும் நம்பிவிட்டாள்.

 

அக்ஷனாவை அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கு அக்ஷராவை விடுதலை செய்யச் சென்றேன். வாசல் மணியை அடித்தபோது கதவைத் திறந்த என் தேவதை இரண்டு கைகளாலும் எங்களைஅணைத்துக்கொண்டாள்.

by: Ahila Ruban

Other Stories by the Author