மீண்டும் காதல்

by Ahila Ruban

மீண்டும்
காதல் - பகுதி 1

கைப்பையைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு பேருந்தில் ஏறினேன். “பின்னால போங்க,” என்றார் பேருந்து ஓட்டுனர். எல்லா ஆசனங்களும் நிரம்பி வழிந்தன. கடைசியில் ஒரு ஆசனம் மட்டும் வெறுமையாக இருந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் அதை அடைந்தபோது அதனருகில் இருந்த ஆசனத்தில் உயரமாக அழகாக ஒருவன் இருந்தான். அவன் கையில் ரமணிச்சந்திரனின் புத்தகம். காதல் கதை படிக்கும் ஆண்மகன். என் மனதில் அவன் எடை பலமடங்கு குறைந்தது. நான் அவனை எடைபோடும்போது அவன் புத்தகத்தில் இருந்து தலையைத் தூக்கிப் புன்னகைத்தான். ரமணிச்சந்திரனின் கதைகளில் வரும் நாயகனைப்போல் அவன் புன்னகை என் மனதைக் கொள்ளை கொண்டது. மனம் தடுமாறியது. என் முதல் அபிப்பிராயத்தை மாற்றக்கூடாது என்று மனதைக் கடிந்துகொண்டு நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். “என் பெயர் சாகித்யன்,” என்றான்.“நல்லது,” என்றுவிட்டு அவனருகில் அமர்ந்தேன். அவன் பார்வை என்னை ஊடுருவியது. “என்ன?” என்றேன்.“என்னை எடை போட்டீங்களே. எவ்வளவு தேறினேன்?” என்றான். “நீங்கள் காதல் கதை படிப்பவர் என்பதைத் தாண்டி என்னால் போகமுடியவில்லை. அதனால் என்னால் மதிப்பீட்டை முடிக்க முடியவில்லை,” என்றேன். “உங்கள் பெயர் என்ன? இல்லை அதை அறியும் தகுதிகூட எனக்கு இல்லை என்று நினைக்கிறீர்களா?” என்றான்.“வினோதா,” என்றேன்.

“சொல்லுங்கள் வினோதா, காதல் கதை படிப்பதில் என்ன தவறு?” என்றான்.“காதல் கதை நிஜ வாழ்க்கையில் நடக்கமுடியாத ஒரு விஷயம். இந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டு இளம் பெண்களும் ஆண்களும் கிடைக்க முடியாத ஒன்றைத் தேடி அலைகிறார்கள். அதனால் எத்தனையோபேர் வாழ்க்கையில் ஏமாற்றத்துக்குள்ளாகி மனமுடைந்துபோகிறார்கள்,” என்றேன் மூச்சுவிடாமல். “என்னால் அதை ஒத்துக்கொள்ளமுடியாது. நிஜவாழ்க்கையில் எத்தனையோ காதல் கதைகளை நான் பார்த்திருக்கிறேன். அதை மனப்பூர்வமாக நான் நம்புகிறேன். என் வாழ்கையில் அது கைகூடும் என்று எதிர்பார்க்கிறேன்,” என்றான்.“உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்,” என்றேன். “எங்கு பயணிக்கிறீர்கள்?” என்றான்.“என் பெற்றோரைப் பார்க்கச் செல்கிறேன்,” என்றேன். எங்கே போகிறேன் என்று சொல்ல விரும்பவில்லை. “ நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்றேன்.“நான் வேலை பார்க்கும் இடத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறேன்,” என்றான். “அடுத்த நிறுத்தத்தில் நாங்கள் இறங்கிக் கொள்ளலாம். இன்று மாலைக்குள் எங்களுக்குள் காதல் தோன்றினால் காதல் நிஜம் என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் காதல் கதைகள் நிஜமில்லை என்று நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் பார்த்தால் காதல் கதாநாயகிமாதிரி இருக்கிறீர்கள். நானும் கதாநாயகன் மாதிரி இருக்கிறேன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு காதல் கதையை உருவாக்கிப் பார்க்கலாம், “ என்றான் குறும்பான ஒரு புன்னகையுடன். “பார்த்தவுடன் காதலா?” என்றேன்.“காதல் எப்போது எங்கே யார்மேல் வரும் என்று சொல்லமுடியாது. உங்களுக்குத் துணிவிருந்தால் பரீட்சித்துப் பார்க்கலாம்,” என்றான் சவாலாக.பைத்தியக்காரச் செயல். வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சுமந்துகொண்டு பயணிக்கும் எனக்கு சிறு பைத்தியக்காரத்தனம் மன மாறுதலைக் கொடுக்கும் என்று தோன்றியது. சாகித்யன் நினைப்பதுபோல் ஒரு நாளில் காதல் கொள்ள நான் பேதையில்லை. இறுதியில் அவன் தோற்கப்போகிறான் என்பது மனதுக்கு மேலும் இதமாக இருந்தது.

“செய்யலாம்,” என்றேன். அவன் முகத்தில் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது. “என்ன எல்லாமே வெறும் பேச்சுத்தானா?” என்றேன் சிரிப்புடன்.“இல்லை, நான் கதாநாயகன் மாதிரி இருக்கிறேன் என்று சொன்னதை எதிர்ப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்,” என்றான் விளையாட்டாக.“எப்படியும் தோற்கப்போகிறீர்கள். இந்த ஒரு நம்பிக்கையாவது உங்களுக்கு இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்,” என்றேன்.“ஆரம்பிக்கமுன்பே முடிவை எழுதிவிடாதீர்கள். காத்திருந்து பார்க்கலாம்,” என்றான். அவனிடம் எந்தப் பதட்டமும் இல்லை. எனக்குள் இதயம் படபடத்தது. “உங்களுடன் ஒரு நாளை நான் கழிக்கவேண்டுமென்றால் நீங்கள் சில விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். இப்பொழுது அதிகாலை ஐந்துமணி. அடுத்த தரிப்பில் நாங்கள் இறங்கிக்கொள்ளலாம். மாலை ஐந்துமணிக்குப் பின் இதே பாதையில் செல்லும் அடுத்த பேருந்தில் நாங்கள் மறுபடியும் ஏறிக்கொள்ளவேண்டும். இந்தப் பன்னிரண்டு மணிநேரத்தில் நாங்கள் எதைப்பற்றியும் பேசலாம் ஆனால் எங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி எதையும் பரிமாறிக்கொள்ளக் கூடாது. கடைசியாக நீங்கள் என்மேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் கைவைக்கக் கூடாது. இதற்கு சம்மதித்தால் உங்கள் பரிசோதனையை செய்துபார்க்கலாம்,” என்றேன்.“சம்மதம் எல்லாவற்றிற்கும்,” என்றான்.“உங்கள் மேல் எனக்குக் காதல் வர வாழ்த்துக்கள்,” என்றேன் புன்னகையுடன்.“நானில்லாமல் வாழமுடியாது என்று நீங்கள் உணர்ந்துகொள்ள என் வாழ்த்துக்கள்,” என்றான் அவன் உதடுகள் விரிய.நாங்கள் அடுத்த தரிப்பில் இறங்கினோம். மாலை ஆறு மணிக்கு இதே பாதையில் செல்லும் வண்டியில் ஏறிக்கொள்ளவது என்று முடிவெடுத்தோம். இன்று மாலைவரை ஒன்றாகக் கழிப்பதும் அதன்பின் அவரவர் திசையில் சென்றுவிடுவது என்றும் ஒப்பந்தம் செய்துகொண்டோம். இந்த ஒரு நாளில் சாகித்யன்மேல் எனக்குக் காதல் வரும் என்று அவன் உறுதியாக நம்பினான். காதல் என்பது என் வாழ்க்கையில் இனிமேல் இல்லை என்று நான் நம்பினேன்.பகுதி இரண்டு அடுத்த வாரம்

மீண்டும்
காதல் - பகுதி 2

நானும் சாகித்யனும் அடுத்த தரிப்பில் பேருந்திலிருந்து இறங்கினோம். ஒருநாள் கொடுங்கள் காதல் உண்மை என்று நிரூபித்துக்காட்டுகிறேன் என்றபோது அவன் வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. கடந்தகால வேதனைகளும் எதிர்கால சோதனைகளும் நிறைத்திருந்த என் மனதிற்கு சிலமணிநேர விடுதலை கொடுக்க எண்ணியே சம்மதித்தேன். எங்கள் இருவரின் வாழ்க்கைப் பயணங்கள் இந்தப் பேருந்தில் சிலமணிநேரம் இணைந்தது அது மறுபடியும் பிரியுமுன் பரீட்ச்சித்துப் பார்த்துவிடலாம் என்றான் அவன்.காதலென்பது பொய்யென்று நம்பும் என்னை அவன்மேல் ஒருநாளில் காதல்கொள்ள வைப்பேன் என்றான். என் மனதின் ஆழம் புரியாதவன் என்று நான் அசட்டை செய்தேன். எப்படியும் அவன் தோற்றுவிடுவான் என்ற நம்பிக்கையுடன் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். பேருந்திலிருந்து இறங்கி அறியாத ஒரு ஊரில் காலடிவைத்தோம். மாலையில் இன்னுமொரு வண்டி இதே பாதையில் செல்லும். அதற்குள் அவன் நீரூபிக்கவேண்டும். இல்லையென்றால் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்.“எங்கே போவது?” என்றேன்.“இந்தப் பாதை போகும் வழியில் போகலாம்,” என்றான். அந்தப் பாதையின் இரண்டு பக்கங்களும் கடைகள். அவற்றின் கண்ணாடி வழியாக அழகாகத் தொங்கும் ஆடைகளையும் ஆபரணங்களையும் அலங்காரப் பொருட்களையும் ரசித்தவாறே தெருவோரம் நடந்தோம். பாதை கடற்கரையோரம் அழைத்துச் சென்றது. வெண்மணலும், பரந்துவிரிந்த நீலக்கடலும் அதன் மறு கரையில் சூரிய உதயமும் மனதை மயக்கின.மணலில் அமர்ந்து சூரிய உதயத்தை மனதுள் வாங்கியபடி நான் இருக்க சாகித்யன் பேசினான்.

“மனிதன் நினைக்கிறான் அவன் அறிவால் எதையும் கட்டுப் படுத்தலாம் என்று. ஆனால் ஒருமுறை இந்தக் கடல் கோபங்கொண்டால் அதைத் தாங்கும் சக்தி எவனுக்கும் இல்லை. எங்கள் தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறினாலும், எங்கள் அறிவு வளர்ந்தாலும் இயற்கையை எதிர்க்கும் வலிமை எதற்கும் இல்லை. அதுபோலத்தான் காதலும்,” என்றான் மெதுவாக. சூரியனிடம் இருந்து கண்களை சாகித்யனிடம் திருப்பியபோது அவன் கடலைப் பார்த்தபடி இருந்தான். சங்கடத்துடன் நான் கண்களைத் தரைமேல் ஓட்டினேன். என் மனம் இளகுவதை உணர்ந்து முனைந்தான்.“வேண்டாம்,” என்றேன் நான் அவசரமா. மரத்திலிருந்து கையை எடுத்தவன் என்னைக் கேள்வியுடன் பார்த்தான். “பூக்கள் மரத்தில் இருந்தால்தான் அழகு. எதையும் தன் உடைமையாக்க விரும்பும் மனிதன் அதைப் பறித்து அதன் அழகைக் குலைத்துவிடுகிறான்,” என்றேன்.“முள்ளுக் குத்தமுன்பே அதை சொல்லியிருக்கலாமே,” என்றான் அவன் சிரிப்புடன். அவன் விரலில் இருந்து இரத்தம் வழிந்தது. அவசரமாக என் கைப்பையில் இருந்த முதலுதவிப் பெட்டியை வெளியே எடுத்து அவன் காயத்தைச் சுத்தம் செய்து மருந்திட்டேன். “நான் ஒப்பந்தத்தை மீறவில்லை. நீங்கள்தான் என் கையைப் பிடித்தீர்கள்,” என்றான். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவன் என்மேல் கைவைக்கக் கூடாது என்று நான் போட்ட நிபந்தனை ஞாபகத்துக்கு வந்தது. நான் அவன் கையை நழுவ விட்டு விலகி நின்றேன். அவன் முகத்திலிருந்து அவன் வேடிக்கையாகப் பேசுகிறான் என்று புரிந்தது.அன்று மாலைவரை எப்படி நாள் நகர்ந்தது என்று தெரியாமல் சென்றது. மறுபடியும் பேருந்தில் ஏறும் நேரம் வந்தது. “என் ஞாபகமாக இதை வைத்திருங்கள்,” என்று அவன் ஒரு புத்தகத்தைக் கையில் கொடுத்தான். பண்டை நாகரிகங்களைப் பற்றியது. எனக்குப் பண்டை நாகரிகங்களில் ஆர்வம் இருப்பதாக சில மணிநேரங்களின் முன்புதான் அவனிடம் கூறினேன். நாங்கள் புத்தகக் கடையொன்றில் சிலநிமிடங்கள் உலாவினோம். அப்பொழுது அவன் வாங்கியிருக்கவேண்டும். ‘பண்டை நாகரிகங்கள் இன்றும் வாழ்வதுபோல் இந்த நாள் நினைவும் என்றும் வாழும் – சாகித்யன்’ என்று அதில் எழுதியிருந்தது.“நன்றி,” என்றேன். “உங்களுக்கு நான் எதுவும் வாங்கவில்லை,” என்றேன்.“நான் ஜெயித்ததாக சொல்லுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றான் அவன் என்னருகில் வந்து. சொல்லிவிடத்தான் மனம் துடித்தது. அவன்மேல் எனக்கு ஏற்பட்டிருப்பதற்குக் காதல் என்பதைத் தவிர வேறு பெயர் கொடுக்க முடியவில்லை. எங்கள் பேருந்து புறப்படத் தயாராவதைக் கடைக்கண்ணால் கண்ட நான் அவனிடம் இருந்து விலகினேன்.“வண்டியில் ஏறவேண்டும்,” என்றுவிட்டுத் திரும்பி நடந்தேன். அவன் என்னைத் தொடரவில்லை. “உங்கள் ஊருக்குப் போகவில்லையா?” என்றேன்.“என் ஊரில்தால் இருக்கிறேன்,” என்றான். அவனை ஆச்சரியத்துடன் பார்த்தேன். இங்கேதான் அவன் வேலை பார்க்கிறானா? அவனை இவ்வளவு விரைவாகப் பிரியப்போகிறேன் என்று எதிர்பார்க்காத நான் தடுமாறினேன்.என் பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தேன். “என் ஞாபகமாக வைத்திருங்கள்,” என்றுவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டேன். வண்டி மெதுவாக நகர ஆரம்பித்தது. வேதனை நிறைந்த எங்கள் கண்கள் கடைசியாக ஒருமுறை சந்தித்தன.

மீண்டும்
காதல் - பகுதி 3

வண்டி நகர ஆரம்பித்தது. எங்கள் கண்கள் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டன. இன்று காலையில்தான் சாகித்தயன் சவால் விட்டான். அவன்மேல் எனக்குக் காதல் வர ஒரு நாள் போதுமென்றான். ஒரே வண்டியில் பயணித்ததைவிட எங்களுக்கிடையில் எந்தவிதமான உறவும் கிடையாது. காதலில் நம்பிக்கை இல்லாத என்னை அவன்மேல் காதல்கொள்ள வைக்க முடியும் என்றான். அதிகாலையில் அடுத்த தரிப்பில் இறங்கினோம். காலையில் இருந்து மாலைவரை ஒன்றாக செலவழித்தோம். அவன் கண்ணியமும் கனிவும் என் மனதைக் கரைத்தது. நான் உணராமலே அவன்மேல் காதல் கொண்டேன்.  மாலையில் மறுபடியும் வண்டியில் ஏறும்போது உண்மையை ஒத்துக்கொள்ள முடியாமல் அவனை விட்டு விலகினேன். அவனைப் பிரிந்து வண்டி இருட்டில் பயணித்தது. அவன் வேதனை நிறைந்த கண்களும் என் மனதில் தடம் பதித்தன.
நானும் ஒரு காலத்தில் காதலை நம்பியவள்தான். ரமணிச்சந்திரன் கதைகளைப் படித்துக் கனவு கண்டவள்தான். உலகத்தின் அழகைப் புகைப்படம் வழியாகக் காட்ட விரும்பினேன். என் நிழற்படங்களை சில கலைக்கூடங்களில் வைத்தேன். சிலர் அவற்றைப் பணம் கொடுத்து வாங்கினார்கள். ஆனாலும் என் நிழற்படங்களுக்கு அதிகம் மதிப்பு இருக்கவில்லை. அவற்றை வாங்கிய ஒரு சிலரில் ராகுலும் ஒருவன்.

என் படத்தின்மேல் காதல்கொண்ட ராகுல் என்னை சந்திக்க விரும்பினான். என்மேலும் காதல் கொண்டான். என் காதல் நாயகன் வந்துவிட்டான் என்று நான் வானத்தில் மிதந்தேன். ராகுல் அழகானவன், வசதி படைத்தவன், என்மேல் அன்பைப் பொழிந்தவன். நாங்கள் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தோம். திருமண நாளும் குறித்துவிட்டோம். திருமணத்திற்கு ஒரு மாதம் இருக்கும்போது என் உடல்நலம் குலைய ஆரம்பித்தது. டாக்டரிடம் சென்றபோது என் சிறுநீரகங்கள் செயலிழந்துகொண்டிருப்பதாகக் கூறினார்கள். பரம்பரையாக வந்திருக்கவேண்டும் என்றார்கள். என் குடும்பத்தில் யாருக்கும் இந்த நோய் இருந்ததில்லை. என் பெற்றோரும் சகோதரங்களும் தங்கள் சிறுநீரகம் ஒன்றைத் தானம் செய்யத் தயாராக இருந்தார்கள். என் உடல் ஏற்க மறுத்துவிட்டது. டாக்டர்களுக்கு அதிசயம். அப்பொழுதுதான் அறிந்துகொண்டேன் என் பெற்றோர் என்னைத் தத்தெடுத்தவிஷயம். என்னைப் பெற்றவர்கள் யாரென்று தெரியாது. அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. என் பெற்றோர் இதை என்னிடம் இருந்து இத்தனை காலம் மறைத்து வைத்திருந்தார்களே என்ற கோபம். ஆனாலும் அவர்கள் என்மேல் காட்டிய அன்பு அந்தக் கோபத்தைத் தணித்தது. என் உடலுக்குப் பொருந்தக்கூடிய சிறுநீரகத்திற்காக நான் காத்திருக்கும் வேளையில் டையாலிஸிஸ் மூலம் என் இரத்தத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். ராகுல் ஆரம்பத்தில் என்மேல் அன்பாகத்தான் இருந்தான். சிறிது சிறிதாக அவன் என்னை விட்டு விலகினான். என் உடல் நிலை சரியில்லாதபோது திருமணம் வேண்டாம் என்று நிறுத்திவிட்டான்.
என் இன்பமான வாழ்க்கை சிதைந்துபோனது. புகைப்படங்கள் எடுப்பதுதான் என் மனதுக்கு ஆறுதல் கொடுத்தது. முன்பு அழகான உலகத்தைப் படம்பிடித்த நான் இப்போது வேதனை நிறைந்த உலகைப் படம்பிடித்தேன். மக்களுக்குப் பிடித்துக்கொண்டது. என் புகைப்படங்கள் பல கலைக்கூடங்களை நிறைக்க ஆரம்பித்தன. அவற்றின் விலையும் எல்லையை மீறியது. பணத்திற்குக் குறையில்லை ஆனால் நலம் குறைந்துகொண்டே போனது. விரைவில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யவேண்டும்.

ராகுல் என்னைக் கைவிட்டபின் காதல் பொய்யென்று முடிவுசெய்தேன். இன்று சாகித்யன் மெய்யென்று நிரூபித்துவிட்டான். அவனிடம் என் காதலை வெளிக்காட்ட மனம் துடித்தாலும் என் உடல் நிலையை அறிந்தால் அவனும் என்னை வெறுப்பானோ என்று பயந்தேன். அதை அறிந்துகொள்ள விரும்பவில்லை. சாகித்யனைப் பிரிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவன் நினைவுகள் தேய்வதாக இல்லை. அன்று என் புகைப்படங்களை வைத்திருக்கும் பெரிய கலைக்கூடமொன்றில் காண்காட்சிக்கு என்னை அழைத்திருந்தார்கள். அவர்கள் கொடுத்த அட்டவணைப் புத்தகத்தைத்தான் அன்று சாகித்யனிடம் என் நினைவாக வைத்திருக்கும்படி கொடுத்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வர இதயம் வலித்தது. காண்காட்சிக்குப் போகத் தயாராக கதவைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டபோது என் டாக்டரிடம் இருந்து அழைப்பு வந்தது.

எனக்கு சிறுநீரகம் ஒன்றைத் தானம் செய்ய யாரோ தயாராக இருப்பதாகவும் என் உடலுக்கு அது ஒத்துவர மிகவும் வாய்ப்பிருக்கின்றது என்றும் சொன்னார்கள். என் வேண்டுதல் கைகூடியது. நேராக வைத்தியசாலைக்குச் சென்றேன். பரிசோதனைகள் பல செய்தபின் சிறுநீரக மாற்று சிகிச்சைக்குத் தயாரானேன். தானம் கொடுப்பவரை சந்திக்க விரும்பியபோது அறுவை சிகிச்சைக்குப் பின் சந்திக்க அவர் விரும்புவதாகச் சொன்னார்கள். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. என் உடல் தேற ஆரம்பித்தது. அன்று ராகுல் என்னைத் தேடி வந்திருந்தான். தன்னால் என்னை மறக்கமுடியவில்லை என்றான். இப்பொழுது என் உடல் தேறிவிட்டதால் நாங்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்றான். இத்தனை நாள் என் பக்கம் திரும்பாதவன் இப்போது அதற்குப் பெயர் காதல் என்றான். என் வேதனையைத் தன்னால் பார்க்கமுடியாமல்தான் என்னை விட்டு விலகினேன் என்றான். அதற்குப் பெயர் காதல் இல்லை சுயநலம் என்றேன். இனிமேல் அவனுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று அனுப்பிவிட்டேன். உண்மையான காதலை சாகித்யனிடம் கண்ட நான் பொய்க்காதலை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.
எனக்கு சிறுநீரகம் தானம் செய்தவர் என்னைச் சந்திக்கத் தயாரென்றார்கள். அது சாகித்யன் என்று கண்டபோது எனக்குள் பட்டாம்பூச்சிகள் படபடத்தன, பறவைகள் சிறகடித்தன, பூக்கள் தலையசைத்தன. “என்னை மறந்து உங்களால் வாழமுடியவில்லை, சரிதானே?” என்றான். “ஒப்பந்தத்தை மீறியது நானில்லை,” என்றேன்.
“காதலுக்கு சட்டமில்லை,” என்றான்.  “எனக்கு சிறுநீரகம் கொடுத்ததற்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை,” என்றேன் கண்கள் கலங்க.  “என்னைக் காதலிப்பதாக ஒத்துக்கொள்ளுங்கள் வினோதா. அதுவே போதும்,” என்றான்.
“அன்று ஒரு நாளில் உங்கள் மேல் எனக்குக் காதல் வந்தது உண்மை. நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்,” என்றேன். “நான் ஜெயித்துவிட்டேன்,” என்றான் அவன் முகம் மலர.

அன்று அவனைப் பிரியும்போது நான் கொடுத்த அட்டவணைப் புத்தகத்தில் என் புகைப்படங்களைப் பார்த்த சாகித்யன் அந்தக் கலைக்கூடத்தில் சென்று என்னைப்பற்றிக் கேட்டிருக்கிறான். அவர்கள் என் நிலையை விளக்கியிருக்கிறார்கள். அவன் என் குடும்பத்தைத் தொடர்புகொள்ள உதவியிருக்கிறார்கள்.
இயற்கை எங்களை இணைத்துவிட்டது. நான் சாகித்யனை அணைத்துக்கொண்டேன். காதல் என்றால் என்ன என்று எனக்குக் காட்டியவன். எனக்கு மறுவாழ்வு கொடுத்தவன். என் மனதில் மீண்டும் காதலை உருவாக்கியவன். தன் உடலின் ஒரு பாகத்தையே என்னுடன் பகிர்ந்துகொண்டவன். இனிமேல் எப்போதும் ஒன்றாகப் பயணிப்பது என்று முடிவு செய்தோம். திருமணம் செய்துகொண்டோம்.

அன்புடன்
அகிலா ரூபன்

Other Stories by the Author